என் மகன் எனக்காக!!!!
அப்பா, இன்று ஒரு நாள் மட்டும்
என்னோடு நேரத்தைச் செலவிடுங்கள்
எனக்காக இந்நாள் மட்டும்
அர்ப்பணிப்பு செய்யுங்கள்!!
இன்று காலை எழுந்ததும்
உங்கள் கைபேசியை வைத்துவிட்டு
என்னைக் கொஞ்சம் பாருங்கள்
உங்களருகில் படுத்திருக்கும்
என்னைக் கொஞ்சம் கொஞ்சுங்கள்!!
அம்மா பசியாற செய்துவிட்டார்
வாருங்கள் சேர்ந்தே சாப்பிடலாம்
என்னை மட்டும் தனியாக என்றும்
சாப்பிடச் சொன்னால் எப்படியப்பா?
வாருங்கள் நீங்களும் அம்மாவும்
சேர்ந்தே வந்து அமருங்கள்
நானும் உங்களோடே இன்று
உட்கார்ந்து பசியாறப் போகிறேனே!!
கொஞ்ச நேரம் வாருங்கள் அப்பா
பூப்பந்து விளையாடலாம்
வெயில் என்று சொல்ல வேண்டாம்
வீட்டின் உள்ளே விளையாடலாம்!!
பூப்பந்து விளையாட்டு போதும் அப்பா
கூடைப்பந்து விளையாடலாம்
கூடை இல்லையென்றால் பரவாயில்லை
சுவரின் மேலே வீசி எறியலாம்!!
விளையாடியது போதும் அப்பா
கேலிப்படம் பார்க்கலாம் வாருங்கள்
இன்று மட்டும் என் பக்கத்தில்
வந்து அமர்ந்து பாருங்கள்!!
எனக்குப் பிடித்த நிகழ்ச்சிகள் பல
அவற்றை இன்று பார்ப்போமே
உங்கள் விருப்பப் படங்களை நீங்கள்
பிறகு கண்டு களியுங்கள்!!
மாலை நேரம் உறங்க வேண்டாம்
என்னோடு சேர்ந்து விளையாடுங்கள்
நான் வீடு கட்டப் போகிறேன்
எனக்குக் கொஞ்சம் உதவுங்கள்!!
நான் கட்டிய வீடு
பெரிய வீடு அழகான வீடு
என்றே கொஞ்சம் புகழுங்கள்
என் மனதைக் குளிர வையுங்கள்!!
என் அன்புள்ள தந்தையே
அதிக அக்கறை கொண்டவரே
உங்கள் பாசமும் அன்பும் நானறிவேன்
எனது ஏக்கமும் கொஞ்சம் நீங்கள் அறியுங்கள்!!

4 comments:
சிறப்பு...
ஒரு மகனுக்கு சிறந்த ஒரு பரிசு... வருங்கால வெகுமதி...
its nice.... keep it up....
அருமையான கவிதை.. உங்கள் மகன் கொடுத்து வைத்தவர்..
நல்ல படைப்பு. நெஞ்சத்தைத் தொடுகிறது. தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே.
Post a Comment